விரைவு ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி ரெயில் நிலையம் முற்றுகை
பேராவூரணியில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
பேராவூரணியில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
பேராவூரணி ரெயில் நிலையம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வழியாக திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரெயில், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரெயில், ஐதராபாத்- ராமேசுவரம் விரைவு ரெயில், வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு ரெயில் ஆகிய 3 விரைவு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் திருவாரூர்- காரைக்குடி பயணிகள் ரெயில் மற்றும் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. மீதம் உள்ள 2 விரைவு ரெயில்கள் பேராவூரணியில் நின்று செல்வதில்லை.
இதனால் பயணிகள் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அல்லது அறந்தாங்கி ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து பயணம் செய்ய வேண்டி உள்ளது.
முற்றுகை போராட்டம்
எனவே பேராவூரணியில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர வர்த்தகர் கழகம் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு பேராவூரணியில் ரெயில் நிலைய முற்றுகை போராட்டம் நடந்தது. இதை முன்னிட்டு ரெயில் நிலையம் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போராட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராசு, திருஞானசம்பந்தம், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், வர்த்தக சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி, கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் சிதம்பரம், அன்பழகன், தி.க. மாவட்ட செயலாளர் சிதம்பரம், பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் பண்ணவயல் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து ரெயில்வே அதிகாரி பெத்துராஜ், ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், தாசில்தார் சுகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 வார காலத்துக்குள் ரெயில்வே உயர் அலுவலர்களை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க ஏற்பாடு செய்து தரப்படும். 2 மாதங்களுக்குள் ரெயில் பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.