எருமப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டி:
எருமப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காப்பீடு தொகைக்கான ஆவணம் இணைக்கப்படவில்லை என்று கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவு சாலையில் நாமக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முறையாக மனு அளித்தால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.