திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திண்டுக்கல் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அலுவலகத்துக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மேலும் தொழிற்சங்க நிர்வாகிகளை அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்குள் செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் அனுமதிக்க போலீசார் வலியுறுத்தினர். அதன்பேரில் அதிகாரிகள், அனுமதி வழங்கினர்.
உள்ளிருப்பு போராட்டம்
அதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மண்டல செயலாளர் அய்யப்பன், மண்டல பொருளாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் திருப்பதி, லெனின், மத்திய சங்க செயலாளர் முருகன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தின்போது, பொது மக்களுக்கான பஸ் சேவை தடைபடுவதை தவிர்க்க வேண்டும் என்றால் தகுதியான டிரைவர், கண்டக்டர்களை பணியமர்த்த வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது. பஸ்களின் மேற்கூரை ஒழுகும் காரணத்துக்காக கண்டக்டரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.