காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு பேரூராட்சி பெண் தலைவர் தர்ணா
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பேரூராட்சி, குண்டலப்பட்டி ஊராட்சி எல்லை பகுதியில் தென்பெண்ணை காவிரி ஆற்றின் கரையோரம் பேரூராட்சி சார்பில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கான பொருட்கள் அங்கு கொட்டகை அமைத்து, அதில் வைக்கப்பட்டிருந்தன. அந்த கொட்டகையை குண்டலப்பட்டி ஊராட்சி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேரூராட்சி தலைவர் அம்சவேணி வந்து, தடுத்து நிறுத்தினார். இதனால் அவருக்கும், அங்கிருந்த சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் அங்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர். இந்தநிலையில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி, காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர், தன்னை தகாத வார்த்தையால் திட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.