ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் பூ வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஓசூர்:
ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பூ வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு கடைகள்
ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் 100 அடி சாலையோரம் பெட்டிக்கடை, பூக்கடை, தள்ளுவண்டி உணவகங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. சிறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக இந்த கடைகளை நடத்தி வந்தனர். இந்த கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்ததால், அடிக்கடி அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஓசூர் மாநகராட்சி சார்பில் கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்யுமாறு, வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தொடங்கினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தியதுடன், அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் வியாபாரிகளுக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசுதேவன் மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் ஆகியோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
இதனிடையே அந்த பகுதியில் பூக்கடை நடத்தி வந்த, ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த கோபால் (37), கடையை அகற்றுவதன் மூலம் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கதறி அழுதவாறு அதிகாரிகளிடம் முறையிட்டார். பின்னர் அவர் திடீரென கேனில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவருக்கு மாற்று ஆடை வழங்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து கடைக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, ஆணையாளரிடம் மனு கொடுக்க கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடந்தது.