புதிதாக அமைக்கப்பட்ட மயானத்தில் உடலை எரிக்க எதிர்ப்பு
சேதுபாவாசத்திரம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மயானத்தில் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சேதுபாவாசத்திரம்,
சேதுபாவாசத்திரம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மயானத்தில் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சுடுகாடு
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி ஆலடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலாம்மாள் (வயது75). இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த பகுதி மக்களுக்காக ஏற்கனவே இருந்த சுடுகாடு கிராமத்திலிருந்து தூரத்திலும், சடலத்தை எடுத்துச்செல்ல பாதை வசதியின்றி சிரமமாக இருந்ததால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பட்டா நிலத்தை விலைக்கு வாங்கி புதிதாக சுடுகாடு அமைத்திருந்தனர். இந்தநிலையில் உயிரிழந்த பாலாம்மாள் உடலை நேற்றுமுன்தினம் உறவினர்கள் வேன் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
பேச்சுவார்த்தை
அப்போது வழியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்பு வழியாக உடலை கொண்டு செல்லக்கூடாது. ஏற்கனவே இருந்த பழைய சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தி உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் உடலை ஏற்றி வந்த வேன் சாலையிலேயே சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், உதவி கலெக்டா் அக்பர்அலி, பேராவூரணி தாசில்தார் சுகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடல் தகனம்
பேச்சுவார்த்தையில் ஏற்கனவே உள்ள சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை மோசமான நிலையில் உள்ளதால் புதிதாக அமைக்கப்பட்ட சுடுகாட்டில் உடலை எரியூட்டுவது என்றும், இது தொடர்பாக விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்றும், அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாதபட்சத்தில் இரு தரப்பினரும் கோர்ட்டுக்கு சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பது என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடா்ந்து மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டு புதிய சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதனால் ஆலடிக்காடு கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.