ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் நகராட்சியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று கடலூர் சாலை இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர். அவர்களுடன் பாதுகாப்புக்காக போலீசாரும் சென்றனர்.

வீடுகளை அகற்ற எதிர்ப்பு

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன், கலைச்செல்வன் ஆகியோருடன் சேர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள், 60 ஆண்டுக்கு மேலாக இங்கு குடிருக்கிறோம். தொடர்ந்து இங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும். அல்லது மாற்று இடம் தர வேண்டும் என்றனர்.

போராட்டம்

மேலும் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் தனபதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தகுதியானவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.

ஆனால் விருத்தாசலம் ஆலடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story