போலீசாரை கண்டித்து மறியல்


போலீசாரை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் உறவினர்கள், போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில், தீபாவளி பண்டிகையன்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த செல்லையா மகன் கண்ணன், பிச்சை மகன் கண்ணன் ஆகியோரை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்களது உறவினர்கள், பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே காலை 6 மணி அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 பேரையும் விடுவிக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். மறியல் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானல், தேனி, திண்டுக்கல், மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு, அவர்களது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசாரை கண்டித்து நடந்த மறியலால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story