பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு


பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு
x

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள சுமார் 2.55 கி.மீ. தூரத்துக்கு மெரினாவை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் லூப் சாலை அமைக்கப்பட்டது. இந்த லூப் சாலை அமைக்கப்படும்போது, நொச்சிக்குப்பம்-பட்டினப்பாக்கம் இடையே விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகள் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மீனவர்கள், மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அதே இடத்தில் சாலையின் இருபுறங்களிலும் தற்போது வரை மீன்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், லூப் சாலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டதாகவும் புகார் எழுந்தது.

மீனவர்கள் சாலை மறியல்

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், நொச்சிக்குப்பம்- பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்றுவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். நேற்றும் மீன் கடைகளை அகற்றி, சாலையை விரிவுப்படுத்துவதற்காக பொக்லைன் எந்திரத்துடன், மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.

இதனை பார்த்த மீனவர்கள், மீன் வியாபாரிகள் மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றுவதில் தீவிரம் காட்டியதால் மீனவர்கள், மீன் வியாபாரிகள் லூப் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள், மீன் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் அவர்கள் மீன் கடைகளை அகற்றக்கூடாது என்றும், தங்களது வாழ்வாதாரத்தை அடியோடு ஒடுக்க நினைப்பது சரியா? என்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரிடம் முறையிட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சிலர் கூறும்போது, "சாந்தோம் நெடுஞ்சாலைதான் பொது போக்குவரத்துக்கான சாலை. அதை விரிவுப்படுத்துவதை விட்டுவிட்டு, எங்களுடைய வாழ்வாதாரமாக இருக்கும் இந்த சாலையை விரிவுப்படுத்துவது என்பது சரியானதாக இருக்காது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி, நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்றனர்.

பேச்சுவார்த்தை

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால், மீனவர்கள், மீன் வியாபாரிகள் சாலை மறியலை ைகவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேபோல், கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களும் திரும்பிச் சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "லூப் சாலை பகுதியில் மீனவர்களுக்காக மீன் சந்தை புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதில் 350-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் கடைகளை அமைக்கலாம். கடைகள் அமைக்கும் பணி வருகிற மே மாதத்துக்குள் நிறைவு பெறும். அதுவரை அங்குள்ள மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Next Story