வேலூரில் போக்குவரத்து மாற்றத்தை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி மக்கள் போராட்டம்
வேலூரில் போக்குவரத்து மாற்றத்தை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூரில் போக்குவரத்து மாற்றத்தை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்தால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து மாற்றத்தின்படி, சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் காட்பாடிக்கு செல்ல வேண்டும் என்றால் கலெக்டர் அலுவலக மேம்பாலத்துக்கும், கிரீன் சர்க்கிளுக்கும் இடையே உள்ள சர்வீஸ் சாலையில் செல்லாமல் கிரீன் சர்க்கிளை தாண்டி உள்ள சர்வீஸ் சாலைக்கு சென்று பின்னர் அங்குள்ள மேம்பாலம் வழியாக சுற்றிக்கொண்டு காட்பாடி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே கலெக்டர் அலுவலக மேம்பாலத்துக்கும், கிரீன் சர்க்கிளுக்கும் இடையே உள்ள சர்வீஸ் சாலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலை தடுப்புகளை நகர்த்தி வைத்து சர்வீஸ் சாலையில் இறங்கி காட்பாடி நோக்கி சென்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மக்கள் போராட்டம்
இதையடுத்து நேற்று அந்த தடுப்புகளை ஒட்டியவாறு இரும்பு பேரிகார்டுகளை போலீசார் வைத்தனர். அதை அகற்றாமல் இருக்க கயிறு மூலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலைக்கு செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து தேசிய நெடுஞ்சாலையில் நேராக செல்லுமாறு கூறினர்.
இதனால் வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல முடியாது என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர். நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சில இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனத்தை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிமெண்டு திண்டினை தாண்டி தூக்கி வைத்து சர்வீஸ் சாலை வழியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றும் அதை அவர்கள் கேட்காமல் சென்றனர்.
அறிவிப்பு பலகை
சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும் என சத்துவாச்சாரி சுரங்க நடைபாதையின் அருகே சர்வீஸ் சாலையை இணைக்கும் பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதேபோல கலெக்டர் அலுவலக மேம்பாலத்துக்கும், கிரீன் சர்க்கிளுக்கும் இடைப்பட்ட சர்வீஸ் சாலை பகுதியிலும் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை கட்டுப்படுத்தினர். தேவையில்லாமல் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.