திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு - மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பத்திரப்பதிவு அலுவலகம்
திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தில் 1914-ம் ஆண்டு முதல் சார்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்காரணமாக சிந்துபட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர்குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, கிழவநேரி, செனடார்பட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் இனி திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இடமாற்றம்
பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன கட்டளை, பெரிய கட்டளை, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் எழுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், இதுவரையில் செயல்பட்ட சிந்துபட்டி சார்பதிவு அலுவலகம் செல்லம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும், இதனால் சிந்துபட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, உள்ளிட்ட கிராம மக்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு செல்லம்பட்டி செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடைமுறைக்கு இப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் எனவே பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
சாலைமறியல்
இந்நிலையில் செல்லம்பட்டி பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்குவதற்கு தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால், அதனை கண்டிக்கும் விதமாக சிந்துபட்டி, காங்கேயநத்தம் தங்களாச்சேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த மறியல் போராட்டம் நடந்தது. இதுகுறித்து அறிந்த துணை ஆட்சியர் ஜெயந்தி, உசிலம்பட்டி வட்டாட்சியர் கருப்பையா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை ஆட்சியர் உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.