கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்


கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
x

சுரண்டை அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே ரெட்டைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த காசிநாடார் உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த துரைக்கண்ணு உள்ளார். இந்நிலையில் தலைவர் காசிநாடார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி துணைத்தலைவர் துரைக்கண்ணு தலைமையில் இயக்குனர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்திருந்தனர். நேற்று காலையில் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான கூட்டம் தென்காசி மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஜான் கேபிரியேல் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் 11 இயக்குனர்களில் 9 இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடைபெறும் நேரத்தில் இருதரப்பை சேர்ந்தவர்களின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர். இதனால் ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பொன்னரசன், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு திரண்டவர்களை கலைந்து போக செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் அதிகரிக்கவே கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் துணைத்தலைவர் தரப்பை சேர்ந்த இயக்குனர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story