ரெயில்வே தனியார்மயத்தை எதிர்த்து நாடாளுமன்றம் முன்பு போராட்டம் -எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு


ரெயில்வே தனியார்மயத்தை எதிர்த்து நாடாளுமன்றம் முன்பு போராட்டம் -எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு
x

ரெயில்வேயில் தனியார்மயமாக்கலை எதிர்த்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.

சென்னை,

ரெயில்வே தனியார்மயத்தை எதிர்த்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் எஸ்.ஆர்.எம்.யூ. (தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் இளைஞர் மாநாடு பெரம்பூர் பனந்தோப்பு ரெயில்வே காலனி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு பணிமனை கோட்டச் செயலாளர் அறிவழகி தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர்கள் பரத்குமார், சஞ்ஜீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளரும், அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவருமாகிய கண்ணையா சிறப்புரையாற்றினார். மாநாட்டில், எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜா ஶ்ரீதர், துணை பொதுச்செயலாளர் ஈஸ்வர்லால், சென்னை கோட்டச்செயலாளர் பால்மாக்ஸ்வெல் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழைகள் பாதிப்பு

1924-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த சமயத்தில் ரெயில்வே பணியாளர்களின் பிரச்சினை மற்றும் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்து மாநாட்டை நடத்தியுள்ளோம். இதேபோல, ரெயில்வே துறை அனைத்து ரெயில்களையும் குளிர்சாதன பெட்டியாக மாற்றிவிட்டால் ஏழை, எளிய மக்கள் ரெயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, ரெயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

போராட்டம்

இந்திய ரெயில்வேயை தனியார்மயமாக்க மாட்டோம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியது. ஆனால், தாராளமயமாக்கல் என்ற கொள்கையின்படி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரியும், ரெயில்வேயை தனியார்மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 10-ந்தேதி டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story