விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை சாலையோரம் வைத்து போராட்டம்
மணப்பாறை அருகே சுடுகாட்டு பாதை பிரச்சினையில், விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை சாலையோரம் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை அருகே சுடுகாட்டு பாதை பிரச்சினையில், விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை சாலையோரம் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் அருகே உள்ள கத்திக்காரன்பட்டியை சேர்ந்தவர் பெரியக்காள்(வயது 65). கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று கத்திகாரன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை இல்லாமல், ஒருவர் அதில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட நபர் பட்டா வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பல ஆண்டு காலம் பயன்படுத்தி வந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ேமலும் சாலையில் கட்டைகளை அடுக்கி, சாலையோரம் பெரியக்காளின் உடலை வைத்து உறவினர்கள் கதறி அழுதனர்.
சுடுகாட்டிற்கு சென்ற பெண்கள்
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே பயன்படுத்திய பாதையைத்தான் சுடுகாட்டிற்கு செல்ல பயன்படுத்துகிறோம் என்று கூறி, திடீரென முள்வேலியை அகற்றிவிட்டு வயல் வழியாக ெபரியக்காள் உடலை சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர். அப்போது அவரது உடலை எரியூட்டுவதற்காக பெண்கள் மரக்கட்டைகளை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்கே சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.