பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
என்.ஐ.ஏ. சோதனை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு பிறகு, தேசிய தலைவர் சலாவுதீன் உள்ளிட்ட தேசிய பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதியில் நேற்று காலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜங்ஷன் பகுதியில் இருந்து பாலக்கரை வழியாக காந்திமார்க்கெட் நோக்கி சென்ற வாகனங்கள் பாலக்கரை மேம்பாலத்தில் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான போலீசார் மறியல் போராட்டம் நடத்திய 30 பேரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி- தஞ்சை சாலையில் அரியமங்கலம் காமராஜ்நகர் பகுதியில் மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் தலைமையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் திருச்சி-தஞ்சை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறை
மேலும் மணப்பாறை அருகே புத்தாநத்தம் பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 11 பேரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர்.