பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம்


பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 2:30 AM IST (Updated: 23 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

பழனி அடிவாரம் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் கிரிவீதியில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். சாலையை ஆக்கிரமித்ததால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது.

இந்தநிலையில் சாலையோர வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனியில் வடக்கு கிரிவீதியில் உள்ள கோவில் தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள், கடைகளை அகற்றியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வியாபாரம் செய்ய தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பழனி அடிவாரம் போலீசார், போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுதொடர்பாக கோவில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் பழனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story