வீடுகளை அகற்ற சென்ற பொக்லைன் எந்திரம் மீது அமர்ந்து போராட்டம்
நாட்டறம்பள்ளி அருகே வீடுகளை இடிக்கசென்றபோது பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே வீடுகளை இடிக்கசென்றபோது பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வீடுகளை இடிக்க சென்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தராபள்ளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1976-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 48 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளனர். அதில் அவர்கள் வீடு கட்டி உள்ளனர்.
பின்னர் 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 48 பேருக்கு கொடுத்த பட்டாக்களின் சர்வே எண்களிலேயே இரண்டாவது முறையாக சிலருக்கு பட்டா இடம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அங்கு கட்டப்பட்டுள்ள சில வீடுகளை இடிக்க நிர்வாகம் சார்பில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்றுள்ளனர்.
பொக்லைன் எந்திரம் மீது அமர்ந்து
இதனால் திருப்பத்தூர் சப்- கலெக்டர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார் மற்றும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரே இடத்திற்கு இரண்டு முறை பட்டா வழங்கியது உங்களுடைய தவறு. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கோர்ட்டு உத்தரவு வந்த பிறகு இடித்துக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் வீடுகளை இடிக்க முற்பட்டதால் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்தும், எந்திரத்தின் முன்பும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு
இதனால் பொதுமக்களுக்கும், நாட்டறம்பள்ளி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வண்ணம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நிலவழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பொது மக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம், வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் காரணமாக மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுத்து அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.