சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்


சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் வாகனங்களை நிறுத்தி 13 இடங்களில் போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்

பல்வேறு கோரிக்கைகள்

புதிய வாகனங்கள் வாங்க அரசு மானியம் வழங்குவதுடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும். ஓட்டுனர் விபத்துக்கான நிவாரண தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

ஆன்லைன் அபராதம் என்ற பெயரில், அதிகமாக தொகையை அபராதமாக வசூலிக்க கூடாது. புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வாகனங்களையும் சாலையில் நிறுத்தும் போராட்டம் மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது.

திண்டுக்கல்

அதன்படி திண்டுக்கல் நாகல்நகரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆட்டோ, மினிவேன்களை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதேபோல் பேகம்பூரில் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் தவக்குமார் தலைமையிலும், பழனி பைபாஸ் சாலையில் முருகபவனம் அருகே மாவட்ட துணை தலைவர் தனசாமி தலைமையிலும், காட்டாஸ்பத்திரி பகுதியில் துணை செயலாளர் வெங்கிடுசாமி தலைமையிலும் போராட்டம் நடந்தது.

பழனியில் போராட்டம்

இதேபோல் பழனியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், சாலையில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடந்தது. பழனி மயில் ரவுண்டான அருகே நடந்த போராட்டத்துக்கு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிச்சமுத்து தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சாலையில் சென்ற வாகனங்களை மறித்து நிறுத்த முயன்றனர். இதனை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பழனி டவுன் போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

13 இடங்களில்...

இதேபோல் சாணார்பட்டி வட்டார சி.ஐ.டி.யூ. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில், கோபால்பட்டி பஸ்நிறுத்தத்தில் வாகன நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மாணிக்கம், தங்கபாண்டி, விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெள்ளைகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் 10 ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 இடங்களில் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடந்தது.


Next Story