மாணவன் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்


மாணவன் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேர்ந்தமரம் அருகே, தற்கொலை செய்த மாணவன் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்

தென்காசி

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சீனு (வயது 12). இவன் அங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 14-ந்தேதி வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் போலீசார் அவனது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தினார். மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில அமைப்புகள் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாவட்ட சூப்பிரண்டு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடலை வாங்க மறுத்து‌ விட்டனர்.

நேற்று 4-வது நாளாக மாணவனின் உறவினர்கள் அவனது வீட்டின் முன்பு அமர்ந்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று வீரசிகாமணி நான்கு ரோட்டில் மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் வீரசிகாமணி நான்கு முக்கு ரோடு மற்றும் அரியநாயகிபுரம் கிராமத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு, சோதனைச்சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்திற்காக வந்த 58 பேர் கைது செய்யப்பட்டு கடையாலுருட்டி சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



Next Story