பழனி முருகன் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால் போராட்டம்
பழனி முருகன் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று பழனிக்கு வந்தார். அவர், அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால் தொடர்ந்து தைப்பூச திருவிழா வருவதால் இதுகுறித்து ஆன்மிக பெரியோர்கள், மடாதிபதிகள் உள்ளிட்டோரை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள் கோவில் கருவறையில் பெண்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் சென்றதால் ஆகமவிதி மீறப்பட்டுள்ளது. இதை கோவில் குருக்கள், ஆன்மிக பெரியோர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே பரிகாரம் செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது. இல்லையேல் பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
மேலும் கோவில் கருவறையில் சரியான முறையில் கட்டுமான பணி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இதை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும். 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது சரியான முறையில் நடக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நல்ல வேட்பாளருக்கு இந்து முன்னணி ஆதரவு அளிக்கும். அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாட வேண்டும். பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக கழிப்பிட வசதி இல்லை. எனவே பல கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில் அவற்றை கொண்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புலிப்பாணி பாத்திர சுவாமிகள், இந்து வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.