காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
கூடலூர்
கூடலூர் கோட்ட வன அலுவலருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஜோஸ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வாழை, பாக்கு, தென்னை, பலா உள்ளிட்ட விவசாய பொருட்களை தினம் தோறும் நாசம் செய்து வரும் காட்டு யானைகள் தற்போது கோடை காலங்களில் மட்டும் இன்றி அனைத்து காலங்களிலும் விவசாய பகுதிகளுக்குள் வரத்துவங்கி உள்ளன. ஒற்றுவயல், பாலம்வயல், மட்டம், பேபிநகர், வட்டிக்கொல்லி, நெல்லிக்குன்னு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இதனால் பொதுமக்கள் காலை, மாலை நேரத்தில் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பலரும் அவ்வப்போது யானைகளிடம் சிக்கி உயிர் தப்பி வருகின்றனர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.
காட்டு யானைகளால் சேதம் அடையும் விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் உயிரையும் விவசாய பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் விவசாயிகளை திரட்டி கூடலூர் கோட்ட வன அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.