கந்தர்வகோட்டை போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்


கந்தர்வகோட்டை போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
x

நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுய உதவிக்குழு பெண்கள் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

நிதி நிறுவனம்

கந்தர்வகோட்டை அருகே முதுகுளத்தை சேர்ந்த பெண்கள் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளனர். இந்த கடன் தொகையை மாதந்தோறும் அவர்கள் செலுத்தியதாகவும், ஆனால் அந்த நிதி நிறுவனம் உரிய ரசீது கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் சுய உதவிக்குழு பெண்கள் மாதந்தோறும் கட்டவேண்டிய கடனை செலுத்தவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட முதுகுளம் சுய உதவிக்குழு பெண்கள் வேறு நிதி நிறுவனத்தில் கடன் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தங்களது குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், இதர குடும்ப செலவினங்களுக்கும் குழு கடன் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

காத்திருப்பு போராட்டம்

இதனால் அதிருப்தி அடைந்த சுய உதவிக்குழுவினர் தலைவி அஞ்சலிதேவி தலைமையில் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடன் தொகை செலுத்திய சுய உதவி குழுவிற்கு ரசீது வழங்காத தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story