மகளிா் போலீஸ் நிலையத்தை முற்றுகை
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்யக்கோரி திருவாரூரில் மகளிர் போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்யக்கோரி திருவாரூரில் மகளிர் போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.
பாலியல் பலாத்காரம்
திருவாரூரை சேர்ந்த 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
முற்றுகை
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பிரச்சினையில் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவாா்த்தை
போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி பழனிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தர்மலிங்கம், மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் கோமதி, முன்னாள் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.