திருச்செந்தூர் அமலிநகரில் 8-வது நாளாக போராட்டம்:ஆலயம் முன்பு மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூர் அமலிநகரில் 8-வது நாளாக போராட்டம்:ஆலயம் முன்பு மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அமலி அன்னை ஆலயம் முன்பு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அமலி அன்னை ஆலயம் முன்பு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தூண்டில் வளைவுபாலம்

திருச்செந்தூர் அமலிநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டதோடு, பணி தொடங்கப்படவில்லை. எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7-ந் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்

தினமும் மீனவர்கள் வெவ்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 8-வது நாளான நேற்று அமலி அன்னை ஆலயம் முன்பு மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீண்டநேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்களும், குடும்பத்தினரும் கோஷங்கள் எழுப்பினர்.

ஊர் நலக்கமிட்டி விளக்கம்

இந்த நிலையில் அமலிநகர் ஊர்நலக்கமிட்டியினர் கூறுகையில், கடந்த ஆண்டு மீன்வளத்துறை மானியக் கோரிக்கையில் ரூ.58 கோடி செலவில் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க அரசு அறிவித்தும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை. அரசு இதற்கான காரணங்களை அறிக்கையாக வெளிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கும் வரை போராட்டம் தொடரும், என தெரிவித்தனர்.


Next Story