அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் போராட்டம்


அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், கல்லூரி முதல்வரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான கலை அறிவியல் பாடங்களுக்காக 2 ஆயிரம் இடங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதையடுத்து சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு, கட்-ஆப் மதிப்பெண், இனசுழற்சி அடிப்படையில் மாணவ- மாணவிகள் சேர்க்கை தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.

இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை

இந்த சூழலில் நேற்று கல்லூரியில் எஞ்சியுள்ள இடங்களுக்க்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் எஞ்சியுள்ள சுமார் 150 இடங்களுக்காக கல்லூரியில் சேர 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கல்லூரிக்கு வந்தனர்.

இவர்களை சேர்க்கை செய்யும் பணியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஈடுபட்டனர். இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் 220 வரை எடுத்த மாணவ- மாணவிகளும், பி.ஏ., பி.காம். உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் 200 வரை எடுத்தவர்களும் உள்ளே அழைக்கப்பட்டனர். இதன் முடிவில் தகுதியுள்ள மாணவ- மாணவிகள் சேர்க்கை செய்யப்பட்டனர்.

மாணவர்கள் போராட்டம்

இதனிடையே கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலர், விரக்தியில் கல்லூரி முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் கல்லூரி முதல்வரிடம் சென்றும் அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோர்களிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி முதல்வர் சிவக்குமார் கூறுகையில், எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கூடுதல் இடங்கள் தேவைப்படுவதால் அதுகுறித்து அரசு கல்லூரி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் அனுமதியளித்தால் அவர்களின் உரிய ஆலோசனைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார். அதன் பிறகு அம்மாணவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் அரசு கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story