தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி விரைவில் போராட்டம்
தமிழக கவர்னரை திரும்பப் பெறக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆற்காடு
தமிழக கவர்னரை திரும்பப் பெறக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
பயிற்சி முகாம்
ராணிப்பேட்டை மண்டல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இடைக்குழு செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆற்காடு அருகே தாஜ்புரா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்.
போராட்டம்
தமிழக கவர்னரின் போக்கை கண்டித்தும், அவரை திரும்ப பெறக்கோரியும் விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழக விவசாய நிலங்களை தொழில் வளத்திற்கு கையகப்படுத்தக் கூடாது.
நெய்வேலியில் மேலும் புதிய மின் நிலையம் அமைக்க விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
நிலங்களை கையகப்படுத்தும் விஷயத்தில் முதல்-அமைச்சரும் தமிழக அரசும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாரிகள் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற நிலையில் செயல்படக்கூடாது.
நிவாரணம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைத்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தை அமல்படுத்த வேண்டும்.
மழை புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக கணக்கு எடுத்து நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனம் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறைவாக காப்பீடு தொகை மட்டுமே வழங்குகின்றனர்.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும். தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 இடங்களிலும் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.