பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்க எதிர்ப்பு: திருப்பூரில் பல இடங்களில் திடீர் மறியல்


பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: திருப்பூரில் பல இடங்களில் திடீர் மறியல்
x

திருப்பூரில் பள்ளிவாசலுக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் முஸ்லிம் மக்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் மாநகரம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

திருப்பூர்,

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. உரிய அனுமதியின்றி இந்த பள்ளிவாசல் செயல்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மகாலட்சுமிநகர் பள்ளிவாசலின் மின் இணைப்பை துண்டிப்பு செய்து 'சீல்' வைப்பு நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் திரண்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 'சீல்' வைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி சந்திப்பில் மறியல்

இந்த சம்பவம் திருப்பூர் மாநகரம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து திருப்பூர் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் முஸ்லிம்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடபட்டனர். மறியலால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள், குமரன் ரோட்டில் இருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அப்படியே பிரதான சாலைகளில் நின்றன. மேலும் மாநகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணிக்கணக்கில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பிரதான சாலைகளில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

அவசர வழக்கு

இதனிடையே வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்காக எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை வருகிற 4-ந் தேதி நடைபெறும் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த நிலை தொடர அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு முஸ்லிம்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story