பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம்
பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி) சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவூட்டும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் தொட்டியம் சரவணன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தேவராஜன் தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசும்போது, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் பதில் அளிக்காத பிரதமரை கண்டித்தும் அவருக்கு நினைவூட்டும் விதமாகவும் இந்த தபால் அனுப்பப்பட்டது. தமிழக முழுவதும் நடைபெற உள்ள இந்த தபால் அனுப்பும் போராட்டம் திருச்சியில் நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் ஐ.என்.டி.யு.சி. சார்பில் 5 லட்சம் தபால்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட உள்ளது என்றார். இந்த போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.