பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும்-எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.
மத்திய செயற்குழு கூட்டம்
எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் மத்திய அரசு கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை செய்து எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயகுழு ஒன்றை மத்திய அரசு அமைந்துள்ளது. இந்த குழு ஒரு ஏமாற்று வேலை. புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் ஒன்றுபட்டு போராடுவதை தடுக்கவே குழு அமைத்துள்ளது.
எஸ்.ஆர்.எம்.யூ.-ஏ.ஐ.ஆர்.எப்.-ன் கடுமையான எதிர்ப்புகளாலும், தொடர் போராட்டங்களாலும், மத்திய அரசின் ரெயில்வே தனியார்மய முயற்சிக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த முதலீடு வரவில்லை.
வந்தே பாரத் ரெயில்கள்
ஐ.சி.எப். கடந்த 2018-ம் ஆண்டு தயாரித்த டிரெய்ன்-18 ( நடுத்தர எக்ஸ்பிரஸ் ரெயில்) குறைபாடுகள் மற்றும் தரமற்ற பொருட்கள் பயன்பாடு என "உயர் அதிகாரிகள் பலர் மீது ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் குற்றம் சுமத்தி அதிகாரிகள் பலரின் எதிர்காலத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கியது. தற்போது அதே டிரெயின்-18 ரெயில்களை "வந்தே பாரத் ெரயில்கள்" என்ற பெயரில் நாடெங்கும் அறிமுகப்படுத்தி, அவற்றை ரெயில்வே பணிமனைகளிலேயே தயாரித்து, 35 ஆண்டுகளுக்கு பராமரிக்க ரெயில் நிலையங்களிலேயே இடம் தருவதாக அழைப்பு விடுத்து இருப்பது கண்டனத்துக்குரியது.
மேலும் தனியார் தயாரித்து 35 ஆண்டுகள் பராமரிப்பது என்பது ஆயிரக்கணக்கான ரெயில்வே ஊழியர்களின் நிரந்தர வேலையை பறித்து விடும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.