ரெயில் பாதையில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிகள்


ரெயில் பாதையில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிகள்
x

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. அதில் வெள்ளியை உருக்கியதை போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக இட்சிமரம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். அவர்கள் மனதை கொள்ளை கொண்டு வருகிறது. குகைகளை கடந்து மலை ரெயிலில் செல்லும் போது, நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இயற்கை காட்சிகளுடன் உள்ள நீர்வீழ்ச்சி கூடுதல் அழகை சேர்க்கிறது. இதேபோல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உருவான நீர்வீழ்ச்சிகள் அருகே சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர் மழை காரணமாக இதமான காலநிலை நிலவி வருகிறது.


Next Story