மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 3 இடங்களில் போராட்டம்
நாகர்கோவிலில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 3 இடங்களில் போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 3 இடங்களில் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூர் சம்பவம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில பா.ஜனதா அரசை கண்டித்து தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லிட்வின் மேரி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்று அனைவரும் தங்களது கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், வாயில் கருப்பு துணி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாஜன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் விபின், பிரவின் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினா்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிரணி செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ரமா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.