திருவாடானை தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிறுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-யூனியன் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
திருவாடானை தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிறுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-யூனியன் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
தொண்டி
திருவாடானை தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிறுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு தீர்மானம்
திருவாடானை யூனியன் சாதாரண கூட்டம் அதன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன், யூனியன் துணைத்தலைவர் செல்வி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் வரவேற்றார்.
இதைதொடர்ந்து நெற்பயிர் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் திருவாடானை தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து முறையான கணக்கெடுப்பை நடத்தி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் உள்பட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அகற்ற வேண்டும்
கவுன்சிலர்கள் சாந்தா கணேசன், முகமது ரில்வான்: பாண்டுகுடி மற்றும் வெள்ளையபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பள்ளிகூடம் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.
கவுன்சிலர்கள் கார்த்திகேயன் ராஜா, மதிவாணன், சிவா: வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 மாத காலமாக மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றால் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது. எனவே மருத்துவமனைக்கு உடனடியாக அரசு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
கவுன்சிலர் சுமதி முத்துராக்கு: நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் போதுமான கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும்.
நடவடிக்கை தேவை
கவுன்சிலர் ஜெயசீலா கண்ணன்: பிள்ளையாரேந்தல் பகுதிக்கு குறைந்த அழுத்த மின்சாரத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் நடைபெறவும் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்கவும் மின் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் மேகலா விஸ்வநாதன்: துத்தாக்குடி ஊராட்சியில் செகுடி கிராமத்தின் அருகே உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டதால் உடனடியாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும். கடம்பூர் ஊராட்சியில் தகுதியான நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை உத்தரவுகள் வழங்கப்பட்டும் ஒரு ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இ்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்கள் பணிகள் குறித்து பேசினர்.