தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்; மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்; மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

நெல்லை மாநகர பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்கள்.

டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த சண்முகசுப்பிரமணியன் அளித்த மனுவில், ''குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கவேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தார்.

வாய்க்கால் சீரமைப்பு

நயினார்குளம் நீர்ப்பாசன சங்க உதவி தலைவர் முருகன் கொடுத்த மனுவில், ''நயினார்குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் அடைப்புகளை சீர் செய்து தரவேண்டும்'' என்று கூறிஇருந்தார்.

மேலப்பாளையம் குலவணிகர்புரம் ஊர் நல கமிட்டி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் 31-வது வார்டு குலவணிகர்புரத்தில் அனைத்து தெருக்களையும் மறு அளவீடு செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

நெல்லை மாநகராட்சி விரிவாக்க பகுதி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், ''மாநகர பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்''என்று கூறிஇருந்தனர்.

வ.உ.சி. மண்டபம்

தமிழ்நாடு சைவ வேளாளர் பேரவை நிறுவன தலைவர் பகவதிமுத்து என்ற புளியரை ராஜா கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை வெயில், மழையில், பறவைகளின் எச்சங்களால் பழுதாகி வருகிறது. எனவே அங்குள்ள பழைய சுவரை அப்புறப்படுத்தி விட்டு மணிமண்டபம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கேட்டிருந்தார்.

கூட்டத்தில் தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, உதவி ஆணையாளர் (நிர்வாகம்) சொர்ணலதா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி, பைஜூ, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா மற்றும் பக்தர்கள் கொடுத்த மனுவில், "பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் பீர்க்கன் குளக்கரையில் உள்ள சாத்தூர் மாரியம்மன் கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குளத்தின் மடை பகுதியில் பல கட்டிடங்கள் ஆக்கிரப்பில் இருக்கும் நிலையில் ஒருதலை பட்சமாக குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே கோவிலை இடிக்கக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story