பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கல்


பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கல்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

உபகரணங்கள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசர கால உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, அவசரகால உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஒவ்வொரு கிராமத்திலும் பேரிடர் காலங்களில் நிர்வாகத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் சேவை புரிய சமுதாய பேரிடர் மீட்பு படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி 47, ஸ்ரீவைகுண்டம் 2, திருச்செந்தூர் 20, சாத்தான்குளம் 1, ஏரல் 27, கோவில்பட்டி 37, ஓட்டப்பிடாரம் 31, விளாத்திகுளம் 23, எட்டயபுரம் 5, கயத்தார் 7 ஆக மொத்தம் 200 சமூக தன்னார்வலர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

பணியாற்ற..

பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்கள் வரும் பருவமழை காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யப்போகிறீர்கள். நீங்கள் மாவட்ட நிர்வாகத்தோடு சேர்ந்து பணியாற்ற போகிறீர்கள். மக்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் பெற்ற பயிற்சியினை செயல்படுத்த தயார்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும். மேலும் நிர்வாகத்தோடு இணைந்து சமூக தன்னார்வலர்களாகிய நீங்களும் பணியாற்ற வேண்டும்.

அதிக மழை பெய்யும்போது நீர் நிலைகளின் அருகாமையில் தாழ்வான பகுதிகளில், ஆற்றுப்படுகை கரையோரங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அங்கு உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்படும். முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுவார்கள். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் சென்று உதவி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் நீங்கள் பணியாற்றும் போது பொதுமக்களிடம் உள்ள ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், சான்றிதழ்கள் போன்றவற்றை எடுத்து வருமாறு அறிவுரை கூற வேண்டும். பேரிடர் காலங்களில் உங்களுடைய பங்கு உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் வெங்கடாசலம், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story