முதலூர் பகுதியில் 186 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
முதலூர் பகுதியில் 186 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் டி.என்.டி.டி.ஏ. தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி, கொம்மடிக்கோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடிசன், தர்மேந்திரராஜ், சேகர் ஆகியோர் வரவேற்றனர். இதில் அந்தந்த பள்ளியில் நடந்த விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று, முதலூர் பள்ளியில் 50 பேருக்கும், கொம்மடிக்கோட்டை பள்ளியில் 76 பேருக்கும், படுக்கப்பத்து பள்ளியில் 60 பேருக்கும் ஆக மொத்தம் 186 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இதில் மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, கொம்மடிக்கோட்டை ஊராட்சி தலைவர் ராஜபுனிதா, படுக்கப்பத்து ஊராட்சி தலைவர் தனலட்சுமி சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வம், குருசாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பேய்குளம் டாக்டர் ரமேஷ் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.