சித்த மருந்துகள் பெரும் பங்கு வகித்தன


சித்த மருந்துகள் பெரும் பங்கு வகித்தன
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை கட்டுப்படுத்த சித்த மருந்துகள் பெரும் பங்கு வகித்தன என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகப்பட்டினம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த சித்த மருந்துகள் பெரும் பங்கு வகித்தன என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

சித்த மருத்துவ கண்காட்சி

நாகை மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு நாகை புதிய பஸ் நிலையத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் வரவேற்றார். நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

பாரம்பரியமான மருத்துவ முறை

சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரியமான, மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்த பின் குணமாக்குவதற்கும் பல்வேறு மூலிகை மருந்துகளை வழங்கிய சித்தர்கள், நீண்ட நாள் வாழ்வதற்கான மருத்துவ முறைகளையும் வழங்கினர்.

"உணவே மருந்து, மருந்தே உணவு" என்ற இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் விளங்குகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் போன்ற சித்த மருந்துகள் பெரும்பங்கு வகித்தன.

நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகங்கள்

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சிறுநீரக கல், பக்கவாதம், சர்க்கரை நோய்,சொரியாசிஸ், வெண்புள்ளி, ரத்த கொதிப்பு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

மேலும், நிலவேம்பு பொடி, கபசுரக்குடிநீர், மூலிகை தைலங்கள். மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. ஆடாதொடை, தூதுவளை, கற்பூரவள்ளி, அருகம்புல், மஞ்சள் கரிசலாங்கண்ணி, துளசி, சந்தனம், செம்மரம், முடக்கறுத்தான் போன்ற பல்வேறு மூலிகை மரசெடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சிகிச்சை பெறலாம்

அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் சித்த டாக்டர்கள் நதியா, ஜாய் மனோகரி, மருந்தாளுனர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story