8 நாட்களுக்கு பிறகு கிராமத்திற்கு திரும்பிய பொதுமக்கள்


8 நாட்களுக்கு பிறகு கிராமத்திற்கு திரும்பிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் 8 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் கிராமத்திற்கு திரும்பினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் 8 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் கிராமத்திற்கு திரும்பினர்.

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு

தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொரட்டகிரி கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனிடையே கடந்த 11-ந்தேதி ஊரை காலி செய்து குழந்தைகள், மூட்டை முடிச்சுகள் மற்றும் கால்நடைகளுடன் காலி செய்து அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள், போலீசார் கிராமமக்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று 8-வது நாளாக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கிராமத்திற்கு திரும்பினர்

இந்தநிலையில் அங்கு வந்த குவாரி மற்றும் கிரசர் ஓனர் பெடரேசன் தலைவர் சம்பங்கி, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ், தனி தாசில்தார் சரவணன் ஆகியோர் நேற்று மாலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாற்று வழியில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர். போலீசார் கிராமமக்களை பாதுகாப்புடன் கிராமத்திற்கு அழைத்து சென்றனர். 8 நாட்களாக நடந்த கிராமமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததால் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Next Story