காலிக்குடங்களுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன், கிருஷ்ணகிரி கலெக்டர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
குடிநீர் பிரச்சினை
காவேரிப்பட்டணம் அருகே உள்ள வெள்ளரம்பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு குடிநீர்பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நேற்று காலிகுடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் இல்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதில்லை. மேலும் இப்பகுதியில் உப்பு நீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜெகதாப் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளரம்பட்டியில் வார்டு உறுப்பினர் நிதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை சிலர் தடுக்கின்றனர். பாப்பனேரி, கொட்டாவூர் ஏரி மலைச்சனூர் ஏரி, அம்மன் ஏரி உள்ளிட்டவைகளில் அரசு அனுமதி இல்லாமல் ஏலம் விடப்பட்டதை நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதை மனதில் வைத்து தற்போது ஆழ்துளை கிணறு அமைக்க விடாமல் அவர்கள் தடுத்து வருகின்றனர்.
புளோரைடு பிரச்சினையால் எலும்பு, தோல் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், எங்கள் பகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.