விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்
விருத்தாசலம்
பூஜ்ஜியம் மதிப்பு
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர், இந்திரா நகர், சிந்தாமணி நகர், நபிகள் நாயகம் தெரு, ஆலடி ரோடு, வயலூர், பூந்தோட்டம், கார்குடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கூறி விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி பகுதியில் உள்ள சொத்துக்களின் மதிப்பு பூஜ்ஜியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது என்பதால் வக்பு மற்றும் பத்திரப்பதிவுத்துறையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்றுகை
நேற்று ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாயவேல் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்பு வாரிய பரிந்துரையை உடனடியாக புறக்கணிக்க வேண்டும், சட்டப்படி கிரையம் பெற்ற எங்கள் சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ கண்டன உரையாற்றினார். வர்த்தகர் சங்க தலைவர் கோபு, கோல்டன் சேட்டு, ஆதி பாலி கிளினிக் நிர்வாக இயக்குனர் சம்பத், வக்கீல்கள் சிவாஜிசிங், புஷ்பதேவன், ஆர்.ஆர்.ரெப்ராக்டரிஸ் ரவிச்சந்திரன், சிந்தாமணி நகர் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் வக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி, தாசில்தார் தனபதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்கக்கோரி சப்-கலெக்ரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிய பொதுமக்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பத்திரப்பதிவு பணிகள் முடங்கியது.
கடைகள் அடைப்பு
பொதுமக்களின் போராட்டத்துக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்து நேற்று காலை முதல் நகரபகுதியில் இருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.