தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ரேஷன் கார்டில் குடும்ப தலைவியின் பெயரை நீக்கியதால் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்
ரேஷன் கார்டில் குடும்ப தலைவியின் பெயரை நீக்கியதால் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்து விட்டதாக பெயர் நீக்கம்
போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்றுள்ளார். அப்போது ரேஷன் அட்டையை வாங்கிய கடையின் விற்பனையாளர் முத்துலட்சுமியிடம் உன்னுடைய பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வட்ட வழங்கல் அலுவலரிடம் குடும்ப தலைவியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து அவர் கேட்டுள்ளார். அப்போது முத்துலட்சுமி இறந்து விட்டதால் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக வட்ட வழங்கல் அலுவலர் கூறியதாக தெரிகிறது.
முற்றுகை போராட்டம்
இதனிடையே முத்துலட்சுமி, பொதுமக்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்று அலுவலர்கள் கூறினர்.
அப்போது இதுபோன்று பலரின் குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.