கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தாங்கள் அடகு வைத்த நகைகளை உடனே வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சிங்காரக்கோட்டையை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் செயலாளராக இருந்தார். இந்த நிலையில் அவர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்ததாகவும், கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதையறிந்த பொதுமக்கள் கடந்த ஆகஸ்ட்டு மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தின் உயர் அதிகாரிகள் வெள்ளபொம்மன்பட்டி கூட்டுறவு கடன் சங்க ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முற்றுகை
மேலும் பொதுமக்கள் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வெள்ளபொம்மன்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடமும் உடனடியாக தங்களின் நகைகளை வழங்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு துணை பதிவாளர் பழனிச்சாமி மனோகரன், விசாரணை அதிகாரி செல்வராஜ், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இன்னும் 15 நாட்களில் நகைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு நீங்கள் கோர்ட்டுக்கு சென்று நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றனர். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.