குடிநீர் லாரியை பொதுமக்கள் முற்றுகை
பேட்டையில் குடிநீர் லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி.ஆர். நகர், சத்யா நகர் மற்றும் அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள மின்மோட்டார் பழுதடைந்ததால், கடந்த சில நாட்களாக அந்த பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அப்பகுதியில் நெல்லை மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு தெருவில் குடிநீர் வழங்கிய நிலையில், மற்றொரு தெருவில் தண்ணீர் வழங்காததால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து குடிநீர் லாரியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் லாரிகள் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு தண்ணீர் பிடித்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.