இறந்த மீன்களை கொட்டி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை


இறந்த மீன்களை கொட்டி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
x

காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் கழிவுநீரை கலப்பதாகக்கூறி, இறந்த மீன்களை கொட்டி, தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை

மீன்கள் சாவு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த மகாணிப்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த கம்பெனியின் பின்பகுதியில் காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாயில் இருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது.

இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் பிள்ளையார்குப்பம், கங்காதரநல்லூர், புதூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்தநிலையில் இங்குள்ள கங்காதரநல்லூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்கள் செத்து மிதந்தது.

முற்றுகை

இதனைக் கண்ட பொதுமக்கள் இங்குள்ள தனியார் கம்பெனியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாக பொது மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போது மீன்கள் இறந்து கிடப்பதால் பொது மக்கள் மீன்களை எடுத்து வந்து தனியார் கம்பெனியின் நுழைவு வாயிலில் கொட்டி தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story