தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
சின்னாளப்பட்டியில் தனியார் நிதிநிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் உள்ள ஜீவா நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சேமிப்பு திட்டம் மூலம் தினசரி, வாரம், மாதம் என பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் திட்டத்தில் குறிப்பிட்ட முதிர்வு தேதி முடிந்த பிறகு அவர்கள் கட்டிய பணம் பொதுமக்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்நிலையில் பலருக்கும் முதிர்வு தேதி முடிந்த பின்னரும் பல மாதங்களாக பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பணம் கட்டிய சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை அந்த நிறுவனத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனே தாங்கள் கட்டிய பணத்தை பெற்று தந்தால் மட்டுமே அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுவோம் என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நிறுவன மேலாளர் வந்தார். அவர், பணம் கட்டி முதிர்வு தேதி முடிந்தவர்களுக்கு நாளை (இன்று) பாதி பணம் தருவதாகவும், மீதி தொகையை ஆயுத பூஜை முடிந்து தருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்காத பொதுமக்கள் தொடர்நது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.