சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

மங்களமேடு அருகே சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

சட்ட விரோத மது விற்பனை

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் பல்வேறு புகார் தெரிவித்து வந்தனர். மேலும் மது பிரியர்களால் அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பெண்களை மதுபிரியர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் முருக்கன்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையை கண்டித்து எறையூர் சர்க்கரை ஆலை முதல் பெரம்பலூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன், மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story