முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் விரிவாக்கம் பணிக்காக முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் விரிவாக்கம் பணிக்காக முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள்
திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் சாலை விரிவாக்கம் பணிக்காக அங்குள்ள சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
இதற்காக வேட்டவலம் சாலையில் தனியார் மகாலில் இருந்து கீழ்நாத்தூர் ரெயில்வே கேட் வரை சுமார் 210 வீடுகளை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு உள்ள பகுதியில் 20 அடிக்கு மேல் வீடு, கடைகள் என ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது.
சாலை மறியல்
ஆனால் அதற்கு பின்னர் உள்ள பகுதியில் 3 அடி மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேட்டவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்கள் சாலை விரிவாக்கம் பணிக்காக ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. ஒரு இடத்தில் 30 அடியும், பக்கத்து இடத்தில் 3 அடி மட்டுமே அகற்றுகின்றனர்.
பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் 3 அடி எடுத்து கொண்டு மீதமுள்ள இடத்தை மீண்டும் எங்களிடம் வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து தாசில்தார் நாளை (வெள்ளிக்கிழமை) வருவாய்த் துறையினர் மூலம் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.