ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
வேலூர் காகிதப்பட்டறை செல்லியம்மன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள மலையடிவார புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் மாட்டு கொட்டகை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருவாய்துறையினர் சென்று பார்வையிட்டு ஆக்கிரமிப்பை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீடு, மாட்டு கொட்டகை கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், மலையில் இருந்து தண்ணீர் வரும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக மலையில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்று வர பாதை இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் அங்கு வேறு நபர்கள் எவ்வித கட்டிடமும் கட்டாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு இதுதொடர்பாக வருவாயத்்துறை, மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி ஆக்கிரமிப்புகள் விரைந்து அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. அதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை வேலூர் வடக்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.