கோரிக்கைகளை நிறைவேற்றாததால்கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
ஓசூர்
ஓசூர் ஒன்றியம் சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட ெபாது மக்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
கிராம சபை கூட்டம்
ஓசூர் ஒன்றியம் சென்னசந்திரம் ஊராட்சிக்குப்பட்ட சென்னசத்திரம், உலியாளம், எலே சந்திரம், மாரசந்திரம், பைர சந்திரம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த கிராம மக்கள் தங்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வங்கிகளில் கடனுதவி மற்றும் பயிர் கடன் வழங்க வேண்டும். இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி சென்னசந்திரம் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பூபதி, சென்னசந்திரம் ஊராட்சி தலைவர் ஜெயகுமார்ரெட்டி, பாகலூர் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இந்நிலையில், நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு, உங்கள் கோரிக்கைகளை தெரியபடுத்துங்கள். அவற்றை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
ஆனால், கிராம மக்கள், நீண்ட காலமாக நாங்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறோம். அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. பட்டா இல்லாததால், அரசின் எந்தவித சலுகைகளையும் பெற முடியவில்லை. பட்டா, மின் இணைப்பு உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் மூலம் கூட்டத்தை அதிகாரிகள் நடத்தி முடித்தனர். கிராமசபை கூட்டத்தை, பொதுமக்கள் புறக்கணித்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.