கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு


கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
x

கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

திருச்சி

ஜீயபுரம்:

கிராம சபை கூட்டம்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருகமணி ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம், திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா தலைமை தாங்கினார். இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 4 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல் பொதுமக்கள் குறைந்த அளவே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பொதுமக்கள் சிலர் பேசுகையில், பழையூர் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளாததால், இந்த கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் ஊராட்சியில் போதிய குடிநீர் வரவில்லை என்றும், வரவு, செலவு கணக்குகளை பொதுமக்கள் கேட்டதற்கும், ஊராட்சி பகுதியில் வார்டு உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்காமல் பணிகள் நடைபெறுவதாக கூறியதற்கும், சரியான முறையில் பதில் தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

புறக்கணிப்பு

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சரவணன், ஜெரால்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனால் மதியம் 2 மணி வரை கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து பொதுமக்களை அழைத்து வர ஊராட்சி செயலாளரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்து வந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய ஆணையர்கள், ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவகுமார், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சில தீர்மானங்களை வாசித்தார். சுமார் 7 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்த பிறகு முடிவடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

புகார் தெரிவிக்கப்படும்

முன்னதாக இது பற்றி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணன் கூறுகையில், ெபாதுவாக கிராம சபை கூட்டத்தில் 120 பேர் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் ஒன்றிய அலுவலகத்தின் மூலம் புகார் தெரிவிக்கப்படும், என்றார்.


Next Story