கல்குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்
கிணத்துக்கடவு தாலுகாவில் 8 கல்குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்றது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகாவில் 8 கல்குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்றது.
கருத்துக்கேட்பு கூட்டம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் உள்ள அரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 7 கல்குவாரிகளில் பாறைகள் உடைப்பதற்கான அனுமதி காலம் முடிந்து விட்டதால் அதனை புதுப்பிக்கவும், பனப்பட்டியில் புதிதாக ஒரு கல்குவாரி தொடங்கவும் மொத்தம் 8 கல்குவாரி உரிமையாளர்கள் மாவட்ட சுற்றுசுழல் துறைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவு ஏழூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசம்பாளையம் ஊராட்சி பகுதியில் கல்குவாரி அருகில் வசித்து வரும் பொதுமக்கள், அதேபோல் பனப்பட்டி ஊராட்சி பகுதியில் தொடங்க உள்ள கல்குவாரி பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) செல்வசுரபி தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுசுழல் பொறியாளர் (தெற்கு) சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
விதிமுறைகள் படி இயக்கம்
கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில்,
எங்கள் பகுதியில் கல்குவாரி தான் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. எங்களுக்கு கல்குவாரிகள் மூலம் ஆப்ரேட்டர், லாரி டிரைவர், கிளீனர், கூலித் தொழிலாளர் உள்ளிட்ட வேலை கிடைக்கிறது. மேலும் கல்குவாரிகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே கல்குவாரிகள் மீண்டும் செயல்படமாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கலாம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் கூறும்போது, கல்குவாரியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கம்பி வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தூசி வெளியே பறக்காத வாறு தார்பாய்கள் உள்ளிட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள நடைமுறைகளின் படி குவாரியை செயல்படுத்தி வருகிறோம். மீண்டும் யாருக்கும் இடையூறு இல்லாமல் கல்குவாரிகள் செயல்படும் என்றனர்.
ஆய்வு செய்து அனுமதி
இதையடுத்து தமிழ்நாடு சுற்றுசூழல் இயக்கம் நிர்வாகி மூகிலன் கூறியதாவது :-
கல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி பாறை கற்களை உடைப்பதால் காற்று, மண், நீர், ஒலி மனிதர்கள், உயிரினங்கள், பல்லியல் சூழ்நிலை பாதிக்கப்படும். கல்குவாரி இருந்தால் அதன் அருகில் 300 மீட்டர் தூரத்திற்கு வீடுகள், வீட்டுமனைகள் இருக்ககூடாது.
ஆனால் அந்த விதிமுறை இங்கு மீறப்பட்டுள்ளது குவாரி அருகில் வீடுகள், கோவில்கள் உள்ளன. ஆனால் இங்கே குவாரி அருகில் வீடுகள் இல்லை என கிராம நிர்வாக அலுவலர் பொய் சான்று கொடுத்திருக்கிறார்.
ஆகவே கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதித்த விதிமுறைகளை கல்குவாரி மீறக் கூடாது. மாசு கட்டுப்பாடு வாரியம் அதிகாரிகள் நேரடியாக சென்று கனிம வளங்கள் சட்டத்தின்படி குவாரிகள் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்றார்.